Skip to main content

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன சி.எஸ்.கே. நிர்வாகம்!

Published on 14/03/2025 | Edited on 14/03/2025

 

CSK administration gives good news to cricket fans

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டுக்கான 18வது சீசன் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை ஐ.பி.எல் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான மெகா ஏலம், கடந்தாண்டு நவம்பர் மாதம் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியின் அட்டவணை வெளியிடப்பட்டது. இந்த சீசனில் 13 மைதானங்களில் 74 போட்டிகள் நடைபெற உள்ளது.

அதன்படி, மார்ச் 22ஆம் தேதி அன்று தொடங்கி இறுதிப் போட்டி மே 25 அன்று நடைபெறும் எனத தெரிவிக்கப்பட்டிருந்தது. மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. அதனை தொடர்ந்து, மார்ச் 23ஆம் தேதிசன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணி ஆகிய அணிகள் ஹைதராபாத்தில் மோதவிருக்கிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள், சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் மோதுகின்றன. மார்ச் 23, 28, 30, ஏப்ரல் 5, 8, 11, 14, 20, 25, 30 மற்றும் மே 3, 7, 12, 16 ஆகிய தேதிகளின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடவிருக்கிறது.

முதல் குவாலிஃபயர் போட்டி, மே 20 அன்றும், எலிமினேட்டர் போட்டி மே 21 அன்றும் ஐதராபாத்தில் நடைபெறுகிறது. 2ஆம் குவாலிஃபர் போட்டி மே 23ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த சீசனின் இறுதிப்போட்டி கொல்கத்தாவில் மே 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளைக் காண வரும் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டை காண்பித்து சென்னை மாநகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் எனச் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சலுகை, போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்துக்குள்ளாக மட்டுமே செல்லும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.