தொழிலாளர்களின் தினமான மே 1ஆம் தேதி அரசு விடுமுறை நாளாக இருந்ததைப் புதுச்சேரி அரசு மாற்றியுள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்பாளர் சி. ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “புதுச்சேரி அரசானது 2022ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதி விடுமுறை அளிக்கவில்லை. இந்த செயலானது உழைக்கும் மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது.
தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினமாக அறிவிக்கப்பட்டு, அன்று நாடு முழுவதும் அரசால் விடுமுறை அளிக்கப்பட்டு தொழிலாளர்களின் உரிமையை, உழைப்பை போற்றி வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி அரசு 2022ஆம் ஆண்டு விடுமுறை தினப் பட்டியலில் தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதி அன்று விடுமுறை அளிக்காதது தொழிலாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவதை காட்டுவதாகும். கடந்த ஆண்டை போன்றே மே 1ஆம் தேதி தொழிலாளர் தின விடுமுறையை அறிவிக்க வேண்டும் என புதுச்சேரி தமிழக வாழ்வுரிமை கட்சி வேண்டுகோள் வைக்கின்றது” இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.