மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்துக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு இணங்காததால், இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சட்டப் பாதுகாப்பு நீக்கப்பட்டது. இதற்கிடையே டூல்கிட் விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸார் ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குநரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
நாட்டின் பிம்பத்தையும், மோடியின் பிம்பத்தையும் கெடுக்கும் வகையில் காங்கிரஸ் டூல்கிட் தயாரித்திருப்பதாக கூறி பாஜக செய்தி தொடர்பாளர் சில ஆவணங்களை ட்விட்டரில் பதிவிட்டார். அதை ட்விட்டர் சந்தேகத்திற்கிடமானது என வகைப்படுத்தியது. இதனையடுத்து, பாஜக செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட ஆவணங்கள் சந்தேகத்திற்கிடமானது என்று கூற ட்விட்டர் நிறுவனத்திடம் என்ன ஆதாரம் இருக்கிறது என கேட்டு டெல்லி போலீசார், கடந்த மாதம் டெல்லி மற்றும் குர்கானில் அமைந்துள்ள ட்விட்டர் நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.
இதன்தொடர்ச்சியாக டெல்லி போலீசாரின் சிறப்பு பிரிவு, பெங்களூரு சென்று அங்கு ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குநர் மனீஷ் மகேஸ்வரியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையின்போது டூல்கிட் விவகாரம் தொடர்பாக கிட்டத்தட்ட 40 கேள்விகள் எழுப்பப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.