டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லியில், அக்கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக உள்ள நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான் உள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியை பொறுத்தவரை, மாநில கட்சி என்ற நிலையையும் தாண்டி, தேசிய அளவில் காலூன்ற முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள குஜராத், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது. இதற்காக, அந்த மாநிலங்களுக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவால், ஆளும் பா.ஜ.க.வைக் கடுமையாக விமர்சித்து செய்து வருகிறார்.
அந்த வகையில், பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றுள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கட்சியின் மாநில நிர்வாகிகள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "பஞ்சாப் மாநிலத்தில்,10 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. நிர்வாகிகள் அணுகி உள்ளனர். டெல்லியில் மூத்த பாஜக தலைவர்களை சந்திக்க வைப்பதாகவும், கோடி கணக்கில் பணம் தருவதாகவும் ஆசை வார்த்தைக் கூறி உள்ளனர். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி அரசைக் கவிழ்ப்பதையே ஒரு நோக்கமாகக் கொண்டு பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது" என்று குற்றம்சாட்டினார்.