கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி தற்போது வரை விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பொழிவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவில் தட்சிண கன்னடா மாவட்டம் சிரூரில் கடந்த 16ஆம் தேதி பெய்த கனமழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர்கள் சின்னண்ணன்(56), சரவணன்(34), முருகன் உள்ளிட்ட 3 பேர் சிக்கிக்கொண்டனர். இதில் தொடர்ச்சியாக மீட்புப்பணி நடைபெற்று வரும் நிலையில் சின்னண்ணன்(56), முருகன் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. சரவணன் என்ற ஓட்டுநரை மீட்புக்குழுவினர் தேடி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.