ஒடிசா முதல்வரின் தனிச்செயலாளர் பதவில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற தமிழகத்தை சேர்ந்த வி.கே பாண்டியன் ஐ.ஏ.எஸ் - க்கு அம்மாநிலத்தில் உயர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2000 ஆம் ஆண்டு ஒடிசா கேடரில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்ற தமிழகத்தை சேர்ந்த வி.கே.பாண்டியன் அம்மாநிலத்தின் கலஹண்டி மாவட்டத்தின் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பின்பு ஒடிசாவில் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றிய வி.கே.பாண்டியன் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்து வந்தார். சொல்லப்போனால் ஒடிசா அரசாங்கத்திலும், ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள நிர்வாகிகள் மத்தியிலும் நவீன் பட்நாயக்கிற்கு அடுத்த இடத்தில் வி.கே பாண்டியன் மிகுந்த செல்வாக்கு உள்ள நபராக பார்க்கப்பட்டார்.
இந்த நிலையில்தான் கடந்த 20 ஆம் தேதி வி.கே.பாண்டியன் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நேற்று அவரது விருப்ப ஓய்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், இன்று ஒடிசா மாநிலத்தின் கேபினெட் அமைச்சர் பதவிக்கு இணையான பதவியில் வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஒடிசா தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள உத்தரவில், “மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி திட்டம் மற்றும் நபின் ஒடிசாவின் தலைவராக வி.கே.பாண்டியன் நியமிக்கப்படுகிறார். இவர் இனி, முதல்வருக்கு கீழ் நேரடியாக பணியாற்றுவார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.