சில தினங்களுக்கு முன் மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் பழங்குடியினத் தொழிலாளி மீது பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பாஜக நிர்வாகியின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.
இதனிடையே பிரவேஷ் சுக்லா அரசு நிலத்தைச் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வீட்டைக் கட்டியிருந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து சித்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரவேஷ் சுக்லா வீடு புல்டோசர் வைத்து இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. பிரவேஷ் சுக்லாவுக்கு மத்தியப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ. கேதார்நாத் சுக்லா மற்றும் பல பாஜக நிர்வாகிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பாதிக்கப்பட்ட பழங்குடியினத் தொழிலாளி தஷ்மத் ராவத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காகத் தனது வீட்டிற்கு அழைத்து மரியாதை செய்தார்.
இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், ஆந்திர மாநிலத்தில் அதே போன்ற ஒரு சம்பவம் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டம் ஓங்கோலை பகுதியைச் சேர்ந்தவர்கள் மோட்டா நவீன் மற்றும் அஞ்சி. இவர்களில் நவீன் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் அந்த பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக இவர்கள் மீது பல வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளன.
இந்நிலையில், பெண் ஒருவருடன் பழகுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையிலான விரோதம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு அப்பகுதியில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைக்கு நவீனை அழைத்துள்ளார் அஞ்சி. பின்பு அங்கு வந்த நவீனுக்கு, அஞ்சியும் அவரது நண்பர்களும் மது ஊற்றிக் கொடுத்துள்ளனர்.
அதன் பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக அஞ்சியும் அவரது நண்பர்களும் சேர்ந்து நவீனைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். மேலும், நவீனின் முகம் மற்றும் வாயில் சிறுநீர் கழித்துள்ளனர். இந்த சம்பவத்தை உடன் இருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை விசாரித்த காவல்துறையினர் அஞ்சி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.