![UNION BUDGET INCOME TAX RELAXATION FOR SENIOR CITIZENS](http://image.nakkheeran.in/cdn/farfuture/BCjGmnLkDT3TS_2kSSyFAp5M9hbvjH4ZnEbR418DyWs/1612169644/sites/default/files/inline-images/NI314444.jpg)
2021- 2022 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "நடப்பாண்டில் ரூபாய் 1.72 லட்சம் கோடி மதிப்பில் விவசாய விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படும். அரசின் தானியக் கொள்முதல் மூலம் ஓராண்டில் ஒன்றரை கோடி கூடுதல் விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். வேளாண் பொருட்களின் குறைந்தபட்ச கொள்முதல் விலை ஒன்றரை மடங்கு அதிகரிக்கப்படும். ரூபாய் 16.5 லட்சம் கோடிக்கு விவசாயக் கடன்கள் தர நடப்பாண்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா அமைக்கப்படும். தமிழகத்தில் கடல் பாசியைப் பதப்படுத்தப் புதிய வசதி ஏற்படுத்தப்படும். சிறு, குறு தொழில்கள் வளர்ச்சிக்காக ரூபாய் 15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும்; 15,000 பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்படும். பொருளாதார நடவடிக்கையாக சென்னை உட்பட 5 முக்கிய மீன்படி துறைமுகங்கள் விரிவுபடுத்தப்படும். தேசிய மொழிகளை மொழிபெயர்க்க புதிய திட்டம் உருவாக்கப்படும். அரசின் அறிவிப்புகள், திட்டங்கள் அனைத்தும் தேசிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப்படும். லடாக்கின் லே பகுதியில் புதிய மத்திய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். சாலையோர வியாபாரிகளுக்கும் சமூக பாதுகாப்பு திட்டம் விரிவுபடுத்தப்படும். மின்னணு பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க ரூபாய் 1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ககன்யான் திட்டத்தின் கீழ் நான்கு இந்திய வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்படும்.
நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும். இதற்காக ரூபாய் 3,768 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் நாட்டின் நிதிப்பற்றாக்குறை 9.50% உயரும் எனக் கணித்துள்ளோம். அடுத்த நிதியாண்டில் அரசின் செலவுகள் ரூபாய் 34.85 லட்சம் கோடியாக உயரும். சந்தைகளில் இருந்து ரூபாய் 12 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் நாட்டின் நிதிப்பற்றாக்குறை 6.8% ஆக குறையும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டுக்கு ரூபாய் 1,500 கோடியும், சூரிய ஆற்றல் கழகத்திற்கு ரூபாய் 1,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் பொருட்களைச் சந்தைப்படுத்தும் E-NAM திட்டத்தில் 1.68 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இதுவரை இல்லாத அளவாக 6.48 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். 75 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை. ஓய்வூதியம், வட்டி ஆகியவற்றை மட்டுமே நம்பியிருந்தால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம். சிறிய அளவிலான வருமான வரி சச்சரவுகளைத் தீர்த்து வைக்கப் புதிய குழு அமைக்கப்படும். வெளிநாடுவாழ் இந்தியர் தாயகம் திரும்பும்போது இரட்டைவரி விதிப்புக்கு ஆளாவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். பங்கு ஈவுத்தொகை (டிவிடெண்ட்) வருமானத்துக்கு முன்கூட்டியே வரி செலுத்த தேவையில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பட்ஜெட் உரையின் போது, மத்திய நிதியமைச்சர், 'இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு' என்று திருக்குறளை மேற்கோள் காட்டினார். அதேபோல், 'பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து' என்ற குறளையும் மேற்கோள் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.