Skip to main content

'இந்தியாவிற்கே இருமொழி கொள்கை தான் பொருந்தும்'-கவிஞர் வைரமுத்து கருத்து

Published on 18/03/2025 | Edited on 18/03/2025
nnn

புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள  தமிழக அரசை மத்திய அரசு தொடர்ந்து நிர்ப்பந்தித்து வரும் நிலையில் தமிழக அரசு அதனை எதிர்த்து வருகிறது. மேலும் மும்மொழி கொள்கை தொடர்பான விவகாரம் மீண்டும் தமிழகத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.

இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் மொழிக் கொள்கை குறித்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திருவள்ளூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாடலாசிரியரும், எழுத்தாளருமான கவிஞர் வைரமுத்து மொழிக் கொள்கை குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், ''மும்மொழிக் கொள்கை என்பது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தாது என்பது என்னுடைய கருத்து. ஆனால் இருமொழிக் கொள்கை என்பது இந்தியாவுக்கே பொருந்தும் என்பது என் கருத்து. ஏனென்றால் இருமொழி கொள்கை என்றால் எல்லா தேசிய இனங்களின் தாய் மொழியும் காப்பாற்றப்படும். பிறகு உலகத்தோடு உறவுகொள்ள உள்ள ஆங்கிலம் என்ற துணைமொழியும் பாதுகாக்கப்படும். எனவே இந்த இரண்டு மொழிகளையும் கற்றுக்கொண்டால் இந்தியாவிற்கே பொருத்தமான ஒரு மொழிக் கொள்கையாக அது இருக்கும்.

மும்மொழி கொள்கை என்பது பலருக்கும் பாதிப்பு என்பதாக முடியும். முன்னாள் அமைச்சர் சிதம்பரம் சொன்னது மாதிரி வட இந்தியாவில் ஒரு மொழிக் கொள்கைதான் இருக்கிறதே தவிர மும்மொழிக் கொள்கை இல்லை. இருமொழிக் கொள்கையும் இல்லை. தாய் மொழியில் மட்டுமே அவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழர்கள் தாய்மொழியோடு ஆங்கிலத்தையும் படித்துக் கொள்வதனால் உலகத்தை ஆளுகிறார்கள். ஒரு சின்ன ஓட்டை இன்னொரு பெரிய ஓட்டை இரண்டின் வழியாக சின்ன பூனையும் போய்விடும், மிகப்பெரிய பூனையும் உள்ளே போய்விடும் என்பது போல தாய் மொழியாகிய தமிழ், உலகம் மொழியாகிய ஆங்கிலம் என்ற இரண்டு துளைகளின் வழியே இந்த ஒட்டுமொத்த மனித சமூகமே பயணப்படும் என்பது என்னுடைய எண்ணம். எனவே தாய் மொழியின் கருத்துக்களை, தாய் மொழியின் பெருமைகளை உயர்த்தி பிடிப்பதற்கு இருமொழி கொள்கைதான் இயல்பானது ஏதுவானது'' என்றார்.

சார்ந்த செய்திகள்