'குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவது என்பது அரிதிலும் அரிதாகி விட்டது' என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கவலை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் அவ்வையார் விழா நடைபெற்றது. இவ்விழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பள்ளி மாணவிகள் அவ்வையார் வேடமிட்டு அவ்வையாரின் நூல்கள் குறித்து உரையாற்றினர்.
இவ்விழாவில் கலந்துகொண்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்து அதிக புத்தகங்களை வாங்கி கொடுத்து படிக்க வைக்க வேண்டும். தமிழ் மொழியை கற்பதில்தான் உயர்வு இருக்கிறது என்பதை மனதில் கொண்டு அனைவரும் உயிருக்குயிராய் தமிழை நேசிக்க வேண்டும்'' என்றார். மேலும், குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டும்முறை அரிதிலும் அரிதாகி விட்டது. குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவதை ஊக்குவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.