
மின்னல் தாக்கி 48 மணி நேரத்தில் மட்டுமே 19 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் ஏப்ரல் 12ஆம் தேதி வரை மின்னல், இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதே சமயம், ஆங்காங்கே பலத்த இடி, மின்னல்களால் உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
இதில், கடந்த 48 மணி நேரத்தில் மட்டுமே மின்னல் தாக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக பெகுசாராய் மாவட்டத்தில் 5 பேர், தர்பங்கா மாவட்டத்தில் 5 பேர், மதுபானி மாவட்டத்தில் 3 பேர், சகர்ஷா மற்றும் சமஸ்திபூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர், லக்ஷ்சாராய் மற்றும் காயா ஆகிய மாவட்டங்களில் தலா 1 பேர் என 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தால் மாநிலமே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த மாநில முதல்வர் நிதிஷ் குமார், அவர்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.