இந்திய - சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த வருடம் இரு நாடுகளுக்குமிடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணமடைந்தனர். சீனா தரப்பில் 45 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், சீன இராணுவ அதிகாரி மற்றும் வீரர்கள் உட்பட ஐந்து பேர் பலியானதாக சீன இராணுவத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகை சமீபத்தில் செய்தி வெளியிட்டது.
இந்தியா - சீனா இடையேயான மோதலைத் தொடர்ந்து, இரு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்தன. இதனால் எல்லையில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து இரு நாடுகளும், பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தையில் இறங்கின. இந்தப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவினைத் தொடர்ந்து, பங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில், இரு நாடுகளும் படைகளை விலக்கிக்கொண்டன. எல்லையின் மற்ற பகுதிகளில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி, இந்திய பகுதியில் சீனா குடியிருப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் அவர், "சீனாவை, இந்திய மண்ணின் ஆக்கிரமிப்பாளர் என பிரதமர் மோடி பகிரங்கமாகவும் தெளிவாகவும் அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என ட்வீட் செய்துள்ளார். இந்திய மண்ணை சீனா ஆக்கிரமிப்பு செய்யவில்லை என மத்திய அரசு கூறிவரும் நிலையில், பாஜக எம்.பி இவ்வாறு தொடர்ந்து கூறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.