தேரா சச்சா தலைமையகத்தில் பலத்த பாதுகாப்புடன் அதிரடி சோதனை!
தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவர், சர்ச்சைக்குரிய சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு, தனது பக்தைகள் இருவரை கற்பழித்த குற்றத்திற்காக கடந்த வாரம் 20 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஹரியானா மாநிலம் சிர்சா பகுதியில் உள்ள தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதல் சோதனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சோதனைக்காக சிர்சாவின் தேரா சச்சா அமைப்பு உள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளன.
ஏற்கனவே, குர்மீத்திற்கு எதிராக தீர்ப்பு வந்ததும், நடந்த கலவரத்தில் 38 பேர் உயிரிழந்தனர். அதுமாதிரியான அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சோதனைக்குழுவின் தலைவராக முன்னாள் மாவட்ட நீதிபதி ஏகேஎஸ் பன்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.
5,000 காவலர்களும், 41 பிரிவுகளைக் கொண்ட துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனைப்பிரிவில் அரசு அதிகாரிகள், வெடிகுண்டு சோதனைப் பிரிவினர், 10க்கும் மேற்பட்ட பூட்டு உடைக்கும் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். மோப்ப நாய்களும் சோதனையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களும், ஆயுதங்களும் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 800 ஏக்கர் நிலப்பரப்புள்ள தேரா சச்சா அமைப்பில் உள்ள மொத்த கட்டிடங்களிலும் சோதனை நடத்த, கூடுதல் நேரம் ஆகலாம் என சோதனைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- ச.ப.மதிவாணன்