ஜனாதிபதி திரவுபதி முர்மு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு தமிழக அரசு மற்றும் ஆளுநர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல்முறையாகத் தமிழகம் வந்துள்ளார் திரவுபதி முர்மு. இன்று காலை 9 மணிக்கு மேல் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் 2 நாள் பயணமாகத் தமிழகம் வந்தார். மதுரை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தமிழக அரசின் முதலமைச்சர் சார்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர். மதுரை விமான நிலையத்திலிருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 12.05 மணியளவில் செல்லும் குடியரசுத் தலைவர், சுமார் 40 நிமிடங்கள் தரிசனம் செய்ய உள்ளார். அவரது தரிசனத்தை முன்னிட்டு அவரது பாதுகாப்பினைக் கருதி மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு சில மணி நேரங்கள் அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு அவருக்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் அழகர் கோவில் பகுதியில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்குச் செல்லும் அவர், சிறிது நேர ஓய்வுக்குப் பின் மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மாலை கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பங்கேற்க உள்ளார். மேலும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு கோவையில் இன்றும் நாளையும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.