இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இதனையடுத்து, நிலவின் தென் துருவத்தில் ஆய்வு தொடர்பான ரகசியங்களைத் தேடும் பணியை பிரக்யான் ரோவர் தொடங்கி நகர்ந்து வந்தது. பின்னர், ரோவரை உறங்கும் நிலைக்கு மாற்றப் போவதாக இஸ்ரோ தரப்பில் இருந்து தகவல் வந்தது.
கோவை, ஈச்சனாரியில் இயங்கி வரும் கற்பகம் ஆன்லைன் பல்கலைக்கழகத்தில் பயிலும் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களின் வரவேற்பு விழா நேற்று(11-09-2023) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “வரும் காலங்களில் பொறியில் படிப்பில் ஏராளமான வாய்ப்புகள் வளர்ந்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் தான் நிறைய வாய்ப்புகள் உருவாக உள்ளது என்பதனை மாணவர்களிடம் எடுத்துரைக்க முயன்றேன். அதிலும், ஜப்பான் போன்ற அதிகம் இளைஞர்கள் இல்லாத நாட்டில், நம் நாட்டின் இளைஞர்களுக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனை மாணவர்கள் பயன்படுத்தி முன்னேற வேண்டும். அடுத்து, கணினி படிப்புகள் தான் பிரதானமானது என்பது இல்லை. மாணவர்கள் பிற பொறியியல் படிப்பிற்கும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், மற்ற பொறியியல் துறைகளிலும் வளர்ச்சி இருக்கிறது. அடுத்த 5 ஆண்டில் கணினி பொறியியலின் வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என தெரியவில்லை. இருந்தும் பொறியியல் படித்தால் வாழ்க்கை சிறக்கும்.
வரும் ஆண்டுகளில் விண்வெளி சார்ந்த புரட்சி வரவிருக்கிறது. மேலும், நேரடியாக செயற்கைக் கோள்களின் துணையுடன் இயங்கும் கைப்பேசியும் உருவாக வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. தொடர்ந்து, உலகளவில் சிறந்த ராக்கெட் ஏவுதள மையமாக குலசேகரப்பட்டணத்தில் அமையவிருக்கும் மையம் இருக்கும். நிலவைச் சார்ந்த விண்வெளிப் பயணங்கள், பொருளாதார முறையில் ஏவுகணைகளை அனுப்பும் தேவையை அதிகரிக்கும். உலக நாடுகளுக்கே எரிசக்தி வழங்கும் வாய்ப்பு நிலவில் உள்ளது. அங்கிருந்து, சில டன் கனிமங்களை எடுத்து வருவதன் மூலம் இதனை உருவாக்கலாம். இதற்கேற்ற வகையில் நிலவில் கட்டமைப்புகளை நிறுவ முடியும். ஆனால், இதற்கு தொழில் நுட்பங்களும், பொறியியல் படித்த மாணவர்களும் அதிகளவில் தேவைப்படுகிறார்கள். இதனால், மாணவர்கள் பொறியியல் சார்ந்த படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இது தொடர்பாக, விண்வெளி ரீதியான படிப்புகள் உருவாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் தான், மாவட்டத்திற்கு ஒரு ஸ்டெம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித) மையங்கள் என முயன்று வருகிறோம். இங்கிருந்து பக்கத்தில், கிணத்துக்கடவு பள்ளியில் ஸ்டெம் நிலையம் உருவாக்கவும் திட்டம் வைத்துள்ளோம். மேலும், சந்திரயான்-3ன் வெற்றி உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றுள்ளது. நமது அனைத்து விண்வெளி செயல்பாடுகளும் கூர்ந்து நோக்கப்படுகிறது. காரணம், நாம் சிக்கனமாகவும் அதே சமயம் சிறப்பாகவும் இயங்குகிறோம். இதனை வைத்தே, நிலவில் சந்திரயானை இறக்கி கவனம் பெற்றோம்.
விண்வெளி துறை எப்படி முக்கியமான ஒன்றோ. அதேபோல விவசாயம் சார்ந்த துறைகளையும் வளர்க்க வேண்டும். இதற்கான செயல்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறது. பின்னர் நம்மால் விண்வெளி செல்லப் பயன்படும் தொழில் நுட்பத்தைக் கொண்டு விமானப் பயணத்தையும் மேற்கொள்ளலாம். இதன் மூலம், பாதுகாப்புடன் விரைவாகப் பயணம் செய்யவும் வாய்ப்புகளை உருவாக்கலாம். நிலவிற்கு தனித்தனியாக சென்று ஆராய்ச்சி நடத்துவதை விட, அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து ஒப்பந்தம் இட்டுச் செயல்படலாம். இந்தியாவை தாண்டி அனைத்து உலக நாடுகளும் விண்வெளிக்கு பயணப்பட வேண்டும்” என்றார் அவர்.