நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்று மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் டெல்லி சேவை மசோதா நிறைவேறியது.
டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதையும், ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றவும், நியமிக்கவும் துணைநிலை ஆளுநருக்கே இறுதி அதிகாரம் உள்ளது என்ற வகையில் மத்திய அரசு உருவாக்கியுள்ள இந்த மசோதா கடந்த 3 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்த நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவாகி 8 மணிநேர விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் இது குறித்துப் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு தலையிடக்கூடாது என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறியிருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப் பிரதமர் மோடி மதிக்கவில்லை. சட்டங்களை இயற்றும் அதிகாரம் எங்களிடம் உள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். மக்களுக்காக உழைக்கத்தான் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது; அவர்களின் உரிமைகளைப் பறிக்க அல்ல.
ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக நான்கு கருத்துக் கணிப்புகளில் தோல்வியடைந்தது. அவர்கள் பின்கதவால் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க முயலுகின்றனர். இது இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ‘கறுப்பு நாள்’. இந்த மசோதா டெல்லி மக்களின் வாக்குரிமையை அவமானப்படுத்தும் செயலாகும் எனத் தெரிவித்தார்.