புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரியின் முகம், தாடை சீரமைப்பு துறையின் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். 100 பல் மருத்துவ மாணவர்கள் பங்கேற்ற பேரணி கடற்கரை சாலையில் தொடங்கி, அரியூர் வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் முடிவடைந்தது.
நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, "உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்பதில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற எந்த பாரபட்சமும் இல்லை. இந்தியர்கள் அனைவரையும் மீட்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக பிரதமர் நான்கு மத்திய அமைச்சர்களை அருகில் உள்ள நாடுகளுக்கு அனுப்பி மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார். உக்ரைன் எல்லையில் இருந்த மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டுள்ளனர். மத்திய பகுதியிலும், ரஷ்யாவின் அருகில் உள்ள பகுதியிலும் உள்ள மாணவர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அனைவரையும் மீட்க மத்திய அரசு முழு முயற்சி எடுத்து வருகிறது. புதுச்சேரியில் இருந்து சென்ற மாணவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப் படுவார்கள். புதுச்சேரி அரசும் ஆளுநர் மாளிகையும் மத்திய வெளியுறவுத் துறையிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பேசும்போது தைரியம் அளிக்க வேண்டும்" என்றார்.
இதனிடையே உக்ரைனில் சிக்கியுள்ள புதுச்சேரி மாணவர்களின் பெற்றோரை புதுச்சேரி உதவி ஆட்சியர் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். புதுச்சேரி தெற்கு துணை ஆட்சியர் ரிஷிதா குப்தா உக்ரைனில் சிக்கி தவிக்கும் வில்லியனூர் வட்டம் பழனிச்சாமி நகரை சேர்ந்த பூங்கொடி மகள் இளங்கதிர், பாகூர் வட்டம் கன்னியகோவில் தண்டபாணி நகரைச் சேர்ந்த ரவிசங்கர் மகள் ராஜசங்கரி ஆகிய இரண்டு மாணவர்கள் குடும்பத்தையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் உக்ரைனில் சிக்கித் தவிப்பவர்களை விரைவில் புதுச்சேரிக்கு பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கிடையில் உக்ரைனிலிருந்து பாதுகாப்பாக நாடு திரும்பி, சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த புதுச்சேரி மாணவி ரோஜா சிவமணியை சென்னை விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை வரவேற்றார்.