இந்தியாவில் விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கவுள்ளது. இந்தநிலையில், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சராக இருந்துவரும் ராம்தாஸ் அத்வாலே, நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான தேவையுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், "சமூகவாரியான மக்கள் தொகையைக் கண்டறிய சாதிவாரியிலான மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குத் தேவையிருக்கிறது. இது ஏழைகளுக்கு சமூக, பொருளாதார, கல்வி பலன்களை வழங்கும்" என கூறியுள்ளார். மேலும், இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். இதன்மூலம் இடஒதுக்கீட்டிற்கான பலன்களை சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் அடைய முடியும்" என கூறியுள்ளார்.
தொடர்ந்து ராம்தாஸ் அத்வாலே, "இடஒதுக்கீடு 50 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என விதி இருக்கிறது. ஆனால் சமூகநீதிக்காக இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது" என தெரிவித்துள்ளார். ராம்தாஸ் அத்வாலே பாஜகவின் கூட்டணிக் கட்சியான இந்திய குடியரசு (ஏ) கட்சியின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.