பொருளாதார ரீதியில் பின்தங்கிய பொதுபிரிவினருக்கு கல்வி,வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரிவுகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றியது. இதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இது குறித்த விவாதத்தில் பேசிய அதிமுக எம்.பி தம்பிதுரை, 'வெளிநாடு வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் 15 லட்சம் செலுத்துவதாக கடந்த தேர்தலின்போது பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றி இருந்தாலே இந்தியாவில் ஏழைகளே இருக்க மாட்டார்கள். ஏழைகளே இல்லையென்றால் பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடும் தேவைப்பட்டிருக்காது. சமூக ரீதியாக மட்டுமே இடஒதுக்கீடு வழங்க அரசியல் சட்டத்தில் இடம் இருக்கிறது. பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு வழங்க முடியாது. அப்படி இந்த திட்டத்தை செயல்படுத்தினால் ஊழல் தான் அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக பின்தங்கியவர் என பணம் கொடுத்து சான்றிதழ் வாங்கும் சூழல் ஏற்படும்’ என கூறி அவையை விட்டு வெளிநடப்பு செய்தார்.
மேலும் இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ' வடமாநில தலைவர்கள் இன்னமும் தங்களது பெயர்களுக்கு பின்னால், சாதியின் பெயரை சேர்த்தே குறிப்பிட்டு வருகின்றனர். பொருளாதார ரீதியிலான இந்த இடஒதுக்கீடு என்பது, ஓட்டுவங்கிக்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.தமிழகத்தில் சாதி, சமூக விழிப்புணர்வு ஏற்பட்டதால், நாம் ஜாதி பெயரை நமது பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்வதில்லை. நான் தம்பிதுரை என்றுதான் என் பெயரை சொல்கிறேனே தவிர, தம்பிதுரை கவுண்டர் என சொல்லுவதில்லை. பிற மாநிலங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் கூட ஜாதி பெயரை தங்கள் பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்கிறார்கள். பிரதமர் மோடியின் பெயரில் கூட மோடி என்பது ஜாதிப் பெயர் தான். ஆனால் நாம் தான் இதில் முன்னோடி' என தெரிவித்தார். மேலும் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு என்பது, சமூக நீதிக்கு எதிரானது எனவும், மாதம் 70,000 ரூபாய் சம்பாதிக்கும் உயர்சாதி குடும்பத்தினர், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களா? என மத்திய அரசுக்கு அவர் கேள்வியும் எழுப்பினார்.