உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் உள்ள எஸ்.எஸ். சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர் கடந்த மாதம் தனது சமூகவலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் தனது கல்லூரி நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் சிலர் தன்னிடம் அத்துமீறியதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அந்த வீடியோவில், "சன்த் சமாஜத்தின் ஒரு பெரிய தலைவர், பல்வேறு பெண்களின் வாழ்வை சீரழித்தவர். தற்போது என்னையும் கொலை செய்ய முயற்சிக்கிறார். அவர் எனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார். தயவு செய்து உதவி செய்யுங்கள். அவர் தனது கையில் போலீஸ், உயரதிகாரிகளை வைத்துள்ளார். முதல்வர் யோகி அவர்களையும், பிரதமர் மோடி அவர்களையும் உதவிக்கு அழைக்கிறேன்" எனக் கூறியிருந்தார்.
இந்த வீடியோ வெளியாவதற்கு அடுத்த நாள் அந்த மாணவி காணாமல் போனார். இந்த நிலையில் அந்த பெண் வெளியிட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அந்தப் பெண்ணின் தந்தை, சுவாமி சின்மயானந்தா பெயரைக் குறிப்பிட்டு தனது மகள் காணாமல் போன புகாரை பதிவு செய்தார். மேலும் சின்மயானந்தா அதிகார பலமிக்கவர். அவரே எனது மகளின் கடத்தலுக்கு பின் இருக்கிறார் என அதில் கூறினார். இந்த நிலையி மாயமான அந்த பெண் சமீபத்தில் ராஜஸ்தானில் மீட்கப்பட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் நடந்த விசாரணையில், சின்மயானந்தா தன்னை ஒரு வருடமாக, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதுகுறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையில், சின்மயானந்தா என்னை பாலியல் வன்கொடுமை செய்தது உட்பட அனைத்து தகவல்களையும் சொல்லிவிட்டேன். அவர் உடல்ரீதியாக என்னை துன்புறுத்தினார். அதற்கான ஆதாரம் இருக்கிறது. தேவைப்படும்போது அதை வழங்குவேன். சின்மயானந்தா, என்னை போல பல சிறுமிகளின் வாழ்க்கையை சீரழித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.