கடலூரைத் தலைமையிடமாகக் கொண்டு நெய்வேலி, விழுப்புரம் பகுதிகளில் செயல்பட்டு வரும் கே.வி.டெக்ஸ் என்ற ஜவுளிக்கடையின் கிளை புதுச்சேரியில் இந்திராகாந்தி சதுக்கம் அருகே உள்ளது. நேற்று காலை ஜவுளிக்கடை திறந்து பொதுமக்கள் உள்ளே சென்று துணிகளை வாங்கிக் கொண்டிருக்கும்போது மூன்று கார்களில் சென்னையிலிருந்து வந்த 10 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் குழு ஜவுளிக்கடையின் உள்ளே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது உள்ளே இருந்த வாடிக்கையாளர்களை வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்டு, வாயில் கதவு சாத்தப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் கடலூரில் உள்ள கே.வி டெக்ஸ் நிறுவன ஜவுளிக் கடையிலும் வருமானவரித் துறையினர் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஜவுளிக் கடையில் தீபாவளி விற்பனைக்குப் பிறகு உரிய வருமானத்தைக் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இரண்டு நாட்களாக வருமான வரி சோதனை நடைபெறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.