Skip to main content

தொடரும் சம்பவம்; பயணிகள் ரயிலில் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Published on 15/03/2025 | Edited on 15/03/2025

 

Smuggling of ration rice in Villupuram-Thiruvarur passenger train

சிதம்பரம் ரயில் நிலைய நடைமேடையில் சிதம்பரம் இருப்புப் பாதை காவல் ஆய்வாளர் அருண்குமார் மற்றும் காவலர்கள் சபரி, சுரேஷ் உள்ளிட்ட காவல்துறையினர் வெள்ளிக்கிழமை இரவு பணியில் இருந்தனர். அப்போது சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு விழுப்புரத்தில் இருந்து திருவாரூர் நோக்கிச் செல்லும் பயணிகள் ரயில் இரவு 8:40 மணியளவில் நடை மேடைக்கு வந்தது. அப்போது அருண்குமார் தலைமையிலான காவல்துறையினர் ரயிலில் ஏறி இரவு நேரத்தில் ரயிலில் தனியாக பயணம் மேற்கொள்ளும் பெண் பயணிகளுக்கு  பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.  

அப்போது ரயில் பெட்டியில் சாக்கு மூட்டைகள் இருந்ததைக் கண்டு சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. ரேஷன் அரிசி குறித்து பயணிகள் மத்தியில் கேட்டபோது யாரும் உரிமை கோரவில்லை. அப்போது ரயில் சீரான வேகத்தில் புறப்பட்டபோது ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து நடைமேடையில் இறக்கி வைக்கப்பட்டது.

Smuggling of ration rice in Villupuram-Thiruvarur passenger train

இதுகுறித்து ஆய்வாளர் அருண்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தொடர்ந்து இது போன்று பயணிகள் ரயிலில் ரேஷன் அரிசிகள் மூட்டை மூட்டையாகக் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அதனை போலீசார் கண்டறிந்து பிடித்தால் யாரும் உரிமை கோருவது இல்லை. அதனால் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறக்கி உணவு பாதுகாப்பு துறையினரிடம் ஒப்படைத்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது அப்படியேதான் நடந்து இருக்கிறது. 100 கிலோ அரிசியைப் பறிமுதல் செய்து இருக்கிறோம். இதேபோல் பல நூறு கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து ஒப்படைத்துள்ளோம்.

மேலும் ரேஷன் அரிசியை ரயிலில் கடத்தினால் சட்டப்படி குற்றம் என்றும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் தொடர்ந்து இதுபோன்று வேலைகளில் ஈடுபடுகின்றனர். எனவே இவர்கள் அடையாளம் காணப்பட்டால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

சார்ந்த செய்திகள்