இந்தியாவில் நடக்கவிருக்கும் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023, வருகிற அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனைகள் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி முதல் தொடங்கியது. முதல் கட்டமாக ஐ.சி.சி.யின் வணிக பார்ட்னரான மாஸ்டர் கார்டை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது. இதற்கிடையில், செப்டம்பர் 15ம் தேதி வரை பல பகுதிகளாகப் பிரித்து டிக்கெட் விற்பனை செய்யப்படும் என ஐ.சி.சி. முன்னதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், சென்னை, டெல்லி மற்றும் புனேயில் நடைபெறவுள்ள இந்திய அணியின் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனைகள் இன்று (31-08-23) இரவு 8 மணி முதல் ஆன்லைனில் கிடைக்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணியினருக்கான ஆட்டம் வருகிற அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, புதுதில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணியோடு இந்தியா அணி வருகிற அக்டோபர் 11 ஆம் தேதி மோதவிருக்கிறது. இதையடுத்து, மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் அக்டோபர் 19 ஆம் தேதி வங்கதேசத்துடன் இந்தியா அணி மோதவிருக்கிறது. இதற்கான டிக்கெட்டுகள் இன்று இரவு 8 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, தர்மசாலா, லக்னோ மற்றும் மும்பையில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. எனவும் ஐ.சி.சி தரப்பில் கூறப்படுகிறது. பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் நடக்கும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையை செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இதையடுத்து, அகமதாபாத்தில் நடக்கும் ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 3ம் தேதி வழங்கப்பட உள்ளது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 15ம் தேதி விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.