தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல்கள் நடந்து முடிந்தன. இதனையடுத்து மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 ஆம் தேதி நடைபெற்றது. மிசோரத்திற்கு மட்டும் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்த சூழலில் தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 64 இடங்களையும், பிஆர்எஸ் 39 இடங்களையும், பாஜக 8 இடங்களையும், ஏஐஎம்ஐஎம் கட்சி 7 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் தெலங்கானா மாநில முதலமைச்சராக, தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டி பதவியேற்பார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார். இவர் டிசம்பர் 7 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இவருக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். முதல் முறையாகத் தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது குறிப்பிடத்தக்கது.