வெளிநாடுவாழ் இந்தியர்களை (NRI) திருமணம் செய்திருந்த பெண்கள் சிலர் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தனர். அதில் அவர்களை திருமணம் செய்துவிட்டு கொடுமை படுத்தியதாக தெரிவித்திருந்தனர். மேலும் வெளியுறவுத்துறை அமைச்சகமும் கடந்த மூன்று ஆண்டுகளில் இதுபோன்று 4,300 புகார்கள் வந்துள்ளதாக தகவலை வெளியிட்டிருந்தது. இதனால் வெளிநாடுவாழ் இந்தியர்களின் திருமணங்களில் சில புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவரப்போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அதுதொடர்பான ஒரு மசோதாவை நேற்று மாநிலங்கள் அவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தாக்கல் செய்தார். அதில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்திய பெண்ணைத் திருமணம் செய்தால், திருமணமாகி 30 நாட்களுக்குள் அதைப் பதிவு செய்யவேண்டும். மேலும் 30 நாட்களில் பதிவு செய்யப்படவில்லை என்றால் அவர்களின் பாஸ்போர்ட் திரும்ப பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மசோதா இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973-லும் திருத்தம் கொண்டுவருகிறது. அதன்படி வெளிநாடுவாழ் இந்தியர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் அவர்களை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாகவும் அறிவிக்கலாம் என்றும் இந்த மசோதா தெரிவித்துள்ளது. இந்தப் புதிய மசோதா, திருமணம் இந்தியாவில் நடந்தாலும், வெளிநாட்டில் நடந்தாலும் இது பொருந்தும் என்கிறது.