தெலங்கானா மாநிலத்தில் 120 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது சிறுவன் 12 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அங்குச் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள போச்சன்பள்ளி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் கோவர்தன். அவரின் விவசாய நிலத்திலிருந்த பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறு நீண்ட காலமாக மூடப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில் மூடப்படாமல் இருந்த அந்த ஆழ்துளைக் கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்த கோவிதனின் மகன் சாய் வரதன் (3), நேற்று மாலை கிணற்றில் விழுந்துள்ளான். இதனையடுத்து மகன் கிணற்றுக்குள் விழுந்ததை அறிந்து குழந்தையை மீட்க முதற்கட்டமாகத் தாயின் சேலை ஒன்றைக் கிணற்றிற்குள் விட்டுள்ளனர் குடும்பத்தினர். அதனைப் பிடித்து அந்தச் சிறுவன் மேல வர முயன்றபோது ஏற்பட்ட மண்சரிவால் குழந்தை கீழே இறங்கத் தொடங்கியது.
இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குழந்தை 25 அடி ஆழம் வரை சென்று இருக்கலாம் எனக் கருதப்பட்டதால், குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டது. பின்னர் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த ஹைதராபாத் மற்றும் விஜயவாடாவிலிருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு, ஆழ்துளைக் கிணற்றின் அருகில் 25 அடி ஆழத்திற்குப் பக்கவாட்டில் குழி தோண்டப்பட்டது. சுமார் 12 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு இன்று காலை உயிரிழந்த நிலையில் குழந்தையை மீட்டனர் அதிகாரிகள். 17 அடி ஆழத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்து விட்டதாகக் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவனின் இந்த மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.