Skip to main content

லக்கிம்பூர் வன்முறை: "விசாரணை குழுவை மேம்படுத்த வேண்டும்" - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

supreme court

 

நான்கு விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்ட லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகிறது.

 

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், விசாரணையின் வேகம் எதிர்பார்த்த அளவு இல்லை என அதிருப்தி தெரிவித்தனர். மேலும், வன்முறை குறித்து நடத்தப்படும் விசாரணையைக் கண்காணிக்க உத்தரப்பிரதேச அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என தெரிவித்ததோடு, இந்த விசாரணையை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதிகளான ராகேஷ் குமார் ஜெயின் அல்லது நீதிபதி ரஞ்சித் சிங் மேற்பார்வை செய்யலாம் என கூறி, இதுகுறித்து பதிலளிக்குமாறு உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

இந்தச் சூழலில் இன்று (15.11.2021) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் இழப்பீடு தரப்படாத நபர்களின் குறைகளைக் கவனிக்குமாறு உத்தரப்பிரதேச அரசுக்கு அறிவுறுத்தினர். இதன்பிறகு உத்தரப்பிரதேச அரசு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை உச்ச நீதிமன்றமே நியமிக்கலாம் என தெரிவித்தது.

 

இதனையடுத்து யாரை நியமிப்பது என்பது குறித்து பரிசீலிக்க தங்களுக்கு ஒருநாள் அவகாசம் வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், விசாரணை நடத்தும் குழுவை மேம்படுத்த வேண்டும் என்றும், குழுவில் உயர் அதிகாரிகள் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும், சிறப்பு விசாரணை குழுவில் உள்ள பெரும்பாலான அதிகாரிகள் லக்கிம்பூரைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்ற நீதிபதிகள், விசாரணைக் குழுவில் சேர்ப்பதற்காக உத்தரப்பிரதேசத்தைச் சேராத, உத்தரப்பிரதேச கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை தருமாறு உத்தரவு பிறப்பித்தனர்.

 

இந்த வழக்கு வரும் புதன்கிழமை (17.11.2021) மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்