Skip to main content

ஆசையாக வளர்த்த நாயை அடித்துக்கொன்ற கொடூரன் மீது வழக்கு பதிவு!

Published on 25/08/2018 | Edited on 25/08/2018

புதுச்சேரி முத்தியால்பேட்டை, மஞ்சினி நகரை சேர்ந்தவர் வினாயகமூர்த்தி. இவர் வீட்டில் Spits வகை நாய்குட்டி வளர்த்து வருகிறார். வினாயகமூர்த்தியும் அவரது குடும்பத்தார்களும் அந்நாய்குட்டியை தங்கள்  வீட்டின் ஒரு உறுப்பினராக, செல்லமாகவும் வளர்த்து வந்தனர்.

 

இந்நிலையில் கடந்த 18/08/2018 அன்று மாலை வினாயகமூர்த்தி வளர்த்து வந்த செல்ல பிராணியான "சுவிமா" என்கிற நாய்குட்டி அவரது வீட்டின் எதிரே விளைந்துள்ள புல்லை சாப்பிட சென்றதாக தெரிகிறது. அப்போது எதிர்வீட்டின் உரிமையாளரான குமரன் என்பவர் அவரது வீட்டு வாசலில் வினாயகமூர்த்தி வளர்க்கும் நாய்குட்டி வந்து அசிங்கம் செய்கிறது என்று வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துள்ளார். ஒருகட்டத்தில் கோபம் தலைக்கேறிய குமரன் தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த சவுக்கு தடியால் வினாயகமூர்த்தி வளர்த்து வந்த "சுவிமா" என்கிற நாய்குட்டியை அடித்துள்ளார்.  வலிதாங்க முடியாமல் கத்திக்கொண்டே வினாயகமூர்த்தியின் வீட்டிற்குள் ஓடிவந்து விழுந்த அந்த நாய்குட்டி பரிதாபமாக இறந்துபோனது.

 

dog

 

 

 

இதுகுறித்து வினாயகமூர்த்தி புதுச்சேரியில் இயங்கி வரும் We for Voiceless-Animal Welfare Organization அமைப்பின் தலைவர் ஜெபின் அவர்களுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அவ்வமைப்பின் நிர்வாகிகள் கலைப்பிரியன், ஐசக், சாம்ராஜ் ஆகியோர் முதற்கட்ட விசாரணையில் இறங்கினர். நடந்த சம்பவம் உண்மை என கண்டறியப்பட்டு 21/08/2018 அன்று புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.


முத்தியால்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் புகாரின்பேரில், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 429-ன் கீழ் வழக்கு பதிவு செய்து இறந்து போன நாய்குட்டியின்  உடலை, புதுச்சேரி கால்நடை மருத்துவர் மோகன், மருத்துவர் மரியா, சுனில், மற்றும் முருகன் ஆகியோர் கொண்ட கால்நடை மருத்துவ குழு மற்றும் முத்தியால்பேட்டை பகுதி கிராம நிர்வாக அலுவலர் (VAO) முத்துகுமார் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் வீட்டு நாயை  கொலை செய்த குமரனை காவல்துறையினர் தேடிவருகின்றனர். 

 

வாயில்லா ஜீவனை அடித்து கொன்ற இதுபோன்ற கொடூரன்களை காவல்துறையும், நீதித்துறையும் தயவு காட்டாமல் சட்டப்படி தண்டிக்கவேண்டும் என்பது  விலங்குகள் நல ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

தெரு நாய்களைப் பிடித்து காப்பகத்தில் ஒப்படைத்த நகராட்சி!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
municipality caught stray dogs and handed them over to the shelter

புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் தெரு நாய்களால் அடிக்கடி விபத்துகள், நாய்கள் கடித்தல், ஆடு, மாடு கால்நடைகளை கடித்து குதறிவிடுகிறது. அதனால் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பலரும் மனுக்கள் கொடுத்திருந்தனர்.

இந்த மனுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவையடுத்து நகராட்சி ஊழியர்கள் 42 நாய்களை பிடித்திருந்தனர். இந்த நாய்களை வெளியிடங்களிலோ, காட்டுப் பகுதியிலோ இறக்கிவிடப்படும் போது மீண்டும் வந்துவிடும் என்பதால்  விராலிமலை ரோடு இலுப்பூர் தாலுகாவில் உள்ள பைரவர் நாய்கள் காப்பகத்தில் ஒப்படைத்து பராமரிக்க கேட்டுள்ளனர்.

இதே போல கிராமங்களிலும் ஏராளமாக சுற்றித்திரியும் நாய்களையும் பிடித்து காப்பகங்களில் வளர்க்கப்படுமானால், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும் நாய்கள் கொல்லப்படாமலும் பாதுகாக்கப்படலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Next Story

தண்ணீர் தேடிச் செல்லும் வன விலங்குகள் பலியாகும் துயரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Tragedy of wild animals lost life in search of water

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அதேபோல தமிழ்நாடு முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளிலும் தண்ணீர் இன்றி மரங்கள் கருகி வருவதுடன் வனவிலங்குகளும் தண்ணீர் இன்றி தவித்து வருகிறது.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக உள்ள வனப்பரப்புகள் மற்றும் கீரமங்கலம் மற்றும் சேந்தன்குடி, குளமங்கலம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி உள்ளிட்ட பல கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே பலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மற்றும் தைலமரக்காடுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது.

இதனால் பலமரக்காடுகளில் இருந்த முயல், மான், மயில்கள், குருவிகள், பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. தற்போது தைலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மரக்காடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தக் காடுகளில் வன உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் இந்தக் காடுகளில் உள்ள மான் போன்ற உயிரினங்கள் தண்ணீர் தேடி வெளியிடங்களுக்குச் செல்லும் போது நாய்களால் கடித்து குதறப்படுகிறது. அதேபோல தண்ணீர் தேடி சாலையைக் கடக்க முயலும்போது வாகனம் மோதி பலியாகிறது. இதேபோல புதுக்கோட்டை  மாவட்டத்தில் திருமயம், கீரமங்கலம் என மாவட்டம் முழுவதும் பல விபத்து சம்பவங்களில் மான்கள், மயில்கள் போன்ற உயிரினங்கள் பலியாகி வருகிறது. இதேபோல வியாழக்கிழமை கீரமங்கலம் பகுதியில் இருந்து தண்ணீர் தேடிச் சென்ற ஒரு மான் திசை மாறி பேராவூரணி பக்கம் சென்றுள்ளது. அந்த மானை பொதுமக்கள் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஆகவே, கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் காடுகளில் சுற்றித்திரியும் பறவைகள், வன உயிரினங்களுக்கு இரையும், தண்ணீரும் கிடைக்காமல் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் வரும் மயில், மான் போன்றவற்றை நாய்கள் கடிப்பதும், விபத்துகளில் சிக்கி பலியாவதும் தொடர்ந்து கொண்டிருப்பதால்  ஒவ்வொரு காட்டுப் பகுதியிலும் சில இடங்களில் கோடைக்காலம் முடியும் வரை தண்ணீர் தொட்டிகள் அமைத்து வன உயிரினங்களைப் பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் கிடைக்காமல் இப்படி வெளியில் வந்து விபத்துகளில் சிக்கி பலியாகிறது. ஆகவே வனத்துறை தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். கோடை வெயிலில் தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைப்பது போல வன உயிரினங்களின் தாகம் தீர்க்கவும் உயிர் காக்கவும் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்கின்றனர் இளைஞர்களும் விவசாயிகளும்.

மேலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது சில நாட்கள் தண்ணீர் வைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு தண்ணீர் வைத்து பராமரிப்பு செய்யவில்லை. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் JJ வடிவத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் கூட தண்ணீர் இல்லை. வனவிலங்குகளை காக்க தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.