மகாத்மா காந்தி சட்டம் தொடர்பாக எந்த பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெறவில்லை என ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் பேசி உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூட்டம் ஒன்றில் பேசும்போது, "நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி படிக்கவில்லை என்று யாராவது சொல்லுவார்களா. அவ்வாறு சொல்ல யாருக்கும் தைரியம் இல்லை. காந்தி பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர் அல்ல. பெரும்பான்மையான மக்கள், காந்தி சட்டப் படிப்பில் பட்டம் பெற்றுள்ளதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர் சட்டப் படிப்பு தொடர்பாக பட்டம் பெற்றவரில்லை. அவர் பள்ளிப் படிப்பில் டிப்ளமோ வரை மட்டுமே படித்தவர். ஆனால், வழக்கறிஞராக வாதாடும் அளவுக்கு தகுதி பெற்றிருந்தார். இந்த தகவல் படித்த நிறைய பேருக்கு தெரியவில்லை" எனப் பேசினார்.
இதற்கு முன்னதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல குறைந்த கல்வித் தகுதி கொண்ட பிரதமரால் சாத்தியமாகுமா. தற்போது நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன. இந்நிலையில் உங்கள் முன் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். குறைந்த கல்வித் தகுதி கொண்ட பிரதமரால் 21 ஆம் நூற்றாண்டில் முன்னேறிய இந்தியாவை உருவாக்க முடியுமா. இந்தியப் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும். நமக்குப் படித்த பிரதமர் கிடைத்து இருந்தால் அவர் பள்ளிகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, பள்ளிகளை மூடுவதற்கு பதிலாக பல பள்ளிகளை திறந்திருப்பார். நாட்டின் பிரதமர் படிக்காதது குறித்து நான் கவலைப்படுகிறேன்" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.