ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் பகுதியை சேர்ந்த சஹாரான் நகரைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவன் ராம்சிங். இவர், கடந்த 2007ம் ஆண்டு தன்னுடைய அம்மாவின் பிறந்த நாளன்று வெளியான செய்தித்தாள் ஒன்றில் குளிர்சாதனப் பெட்டி தொடர்பான விளம்பரத்தை பார்த்துள்ளார். அந்த சமயம், ராம்சிங்கின் அம்மாவும் புதிதாக ஃபிரிட்ஜ் ஒன்று வாங்கவேண்டும் எனக் கூறி வந்துள்ளார். அதனை மனதில் வைத்துக்கொண்டு கடந்த 2007ம் ஆண்டு முதல் இதுவரை 12 ஆண்டுகளாக தனக்குக் கிடைத்த 1, 2, 5, 10 ரூபாய் நாணயங்களை சிறிது சிறிதாக வீட்டில் உள்ள உண்டியலில் சேமித்து வைத்துள்ளார். உண்டியல் முழுதும் நிரம்பிய பின்னர், அதனை தன் அம்மாவிடம் தெரிவிக்க வேண்டும் என நினைத்து சேமிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார் ராம்சிங்.
சேமித்து வைத்திருந்த நாணயங்களை எடுத்துக்கொண்டு குளிர் சாதனப்பெட்டி வாங்க தனது அம்மாவுடன் கடைக்கு சென்றுள்ளார் ராம்சிங். குளிர் சாதன பெட்டியை தேர்வு செய்த பின்னர், தான் எடுத்து சென்ற நாணயங்களை கடைக்காரரிடம் அவர் கொடுத்துள்ளார். இவ்வளவு நாணயங்களை பார்த்த கடைக்காரர் சற்று அதிர்ச்சியுடன் தன் பணியாளர்களை விட்டு எண்ண சொல்லியுள்ளார். நாணயங்களின் எடை 35 கிலோவாகவும், 13,050 பணமும் இருந்துள்ளது. குளிர்சாதன பெட்டியின் விலையை விட இரண்டாயிரம் குறைவாக இருந்துள்ளது. இருந்தும் சிறுவனின் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில், 2000 ரூபாயை குறைக்குக்கொண்டு கடைக்காரர் அவருக்கு குளிர்சாதனப் பெட்டியை கொடுத்துள்ளார். மேலும், ராம்சிங் கொண்டு வந்த 35 கிலோ எடையுள்ள நாணயங்களை எண்ணுவதற்கே 4 மணிநேரம் ஆனதாகவும் கடையில் உள்ள பணியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.