இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் குறைந்துள்ளது. இருப்பினும் பல்வேறு கரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. மேலும் வேறு மாநிலங்களிலிருந்து தங்கள் மாநிலங்களில் கரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு, சில மாநில அரசுகள் வெளிமாநில பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் நெகட்டிவ் சான்றிதழை கட்டாயமாக்கியுள்ளன. இருப்பினும் அதில் சில மாநிலங்கள் அரசுகள், தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்திக்கொண்டுள்ள பயணிகளை ஆர்டி-பிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் இல்லாமலே தங்கள் மாநிலங்களுக்குள் அனுமதித்து வருகின்றனர்.
அதேநேரத்தில் மேற்குவங்கம், கர்நாடகா, கோவா மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்ளில், இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கும் ஆர்டி-பிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக உள்ளது. இந்தநிலையில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில், பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள், தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தியிருந்தால் அவர்களிடம் ஆர்டி-பிசிஆர் சான்றிதழை கேட்கவேண்டாம் எனவும், அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரியான பயணகட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் எனவும் மத்திய சுற்றுலாத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.