டிக் டாக் செயலி மூலம் ஐ.ஜி க்கு சவால் விடுவது போன்று வீடியோ எடுத்து வெளியிட்டதால் தெலுங்கானா உள்துறை அமைச்சரின் பேரன் சிக்கலில் சிக்கியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தின் உள்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் முகமது மக்மூத் அலி. அவரது பேரன் பர்கான் அகமது தனது நண்பர்களுடன் இணைந்து டிக் டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசு வாகனத்தில் பர்கான் தனது நண்பர்களுடன் அமர்ந்தபடி காவல்துறை ஐ.ஜி க்கு சவால் விடுவது போல வசனத்திற்கு நடித்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
அரசு வாகனத்தின் மீது அமர்ந்தது, மற்றும் காவல்துறை அதிகாரிக்கு சவால் விடுவது போன்ற நடிப்பு ஆகியவை அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சர் முகமது மக்மூத் அலி கூறுகையில், "குடும்பத்தோடு ஒரு விழாவில் கலந்துகொள்ள யகாட்புரா சென்ற போதுதான் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அந்த வீடியோவை பார்க்கும்போது, என் பேரன் போலீஸ் வேனில் அமர்ந்து இருக்கிறாரே தவிற, அவர் எதுவும் பேசவில்லை. கூட இருக்கும் அவருடைய நண்பர்தான் வீடியோவில் பேசுகிறார்” என்றார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளார். அமைச்சரின் பேரன் செய்த இந்த செயலுக்கு பலரும் தாக்கல் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.