ஒடிசா மாநிலம் கேந்திரப்பாரா மாவட்டத்தில் உள்ள மார்ஷாகாய் பகுதியில் தனியார் ஆங்கில வழி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளியில் 7 வயது மாணவர் ஒருவர் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவன் கடந்த 25 ஆம் தேதி வகுப்பில் ஆசிரியருக்கு இடையூறு ஏற்படுத்தியவாறு விளையாடியதாகக் கூறப்படுகிறது. மேலும், அதனால் மற்ற மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வகுப்பு ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவனை கடுமையாக திட்டியதோடு, அவரை இழுத்துச் சென்று பள்ளியின் கதவில் கட்டிவைத்து கடுமையாக தாக்கியுள்ளார். அவரை தொடர்ந்து மற்ற ஆசிரியர்களும் மாணவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் இந்த சம்பவம் நடந்த நிலையில், அண்மையில் மாணவரை ஆசிரியர் கட்டி வைத்து அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சியடையச் செய்த நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.