மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் பகுதியில் உள்ள பிண்டில் வசிக்கும் 34 வயது பெண் ஒருவர், கடந்த 8ஆம் தேதி பிதர்வார் தாலுகாவில் தாசில்தாராக பணிபுரியும் சத்ருகன் சிங் சவுகான் மீது போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரில், கணவன் மறைந்த பிறகு கணவரின் சகோதரர் மூலம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட சவுகான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். அதை வைத்து கடந்த 17 ஆண்டுகளாக தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். ஆனால், தாசில்தார் சவுகானுக்கு ஏற்கெனவே 3 மனைவிகள் இருப்பது தற்போது தான் தெரியவந்தது. இதை மறைத்து பல ஆண்டுகளாக அவர் தன்னை ஏமாற்றி வந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரின் அடிப்படையில், சத்ருகன் சிங் சவுகானை தாசில்தார் பதவியில் இருந்து நீக்கி நில வருவாய் அலுவலகத்தில் பணியமர்த்த ஆட்சியர் தரப்பில் உத்தரவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், சத்ருகன் சிங் சவுகான் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, அரசு பெண் ஊழியர் ஒருவர் சவுகான் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.