தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க உள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி ம.தி.மு.க சார்பில் கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி (20.06.2023) தொடங்கி கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி வரை பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியை மதிமுக தலைமைக் கழகம் தாயகத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைத்திருந்தார். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா ஆர்.நல்லகண்ணு அவர்கள் முதல் கையெழுத்திட்டிருந்தார். இதையடுத்து மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் வெற்றி பெற கடந்த ஜூன் 21 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வைகோ வாழ்த்தும் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரும் கையெழுத்து இயக்கம் சார்பில் 57 எம்.பி.க்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என 50 லட்சம் பேரிடம் இருந்து கையெழுத்து பெறப்பட்டது. இந்நிலையில் கையெழுத்திடப்பட்ட பிரதிகளை வைகோ இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்க உள்ளார்.