பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் மாநிலம் கார்கில் பகுதியில் இராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். பிரதமர் நரேந்திர மோடி தான் பிரதமராக பதவியேற்றதிலிருந்து எட்டு ஆண்டுகளாக இராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிவருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு காஷ்மீர் மாநிலம் கார்கில் பகுதியில் இராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார்.
அப்போது அங்கு இராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, "என்னைப் பொறுத்தவரை, நீங்கள் அனைவரும் பல ஆண்டுகளாக எனது குடும்பமாக இருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் மத்தியில் தீபாவளியைக் கொண்டாடுவது இந்த ஆண்டு எனக்கு கிடைத்த பாக்கியம். புதிய இந்தியா என்பது ஒரு நாடு மட்டுமல்ல, அன்பு, தியாகம், இரக்கம், மகத்தான திறமை, தைரியம் உள்ளிட்டவையின் கலவையாக இந்த புதிய இந்தியா உருவாகியுள்ளது. ஒரு நாட்டின் துணிச்சலான வீரர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தால், அந்த நாடு ஒரு பொழுதும் அழியாது. இமயமலை போல் நம் இராணுவம் இருப்பதால் நமது நாடு பெருமை கொள்கிறது” என்று கூறினார்.
இந்தநிகழ்ச்சியில் பிரதமரை வரவேற்ற தமிழக ராணுவ வீரர்கள் 'சுராங்கனி.. சுராங்கனி... சுராங்கனிக்கா மாலு கண்ணா வா... ஊட்டியில மாமனுக்கு மலையில வீடு... ஊட்டுக்குள்ள குளிரடிச்சா விஸ்கிய போடு... சூடு கொஞ்சம் ஏறுச்சுன்னா சுதியில பாடு... ஜோடிக்கொரு பொண்ணிருக்கு டூயட்டு பாடு'' என்ற பாடலை வரி பிசகாமல் பாடியபடி அவரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி அவரது கைகளால் இனிப்புகளை ஊட்டினார். தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், 'தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இந்த அற்புதமான செயலால் நம்மை வியக்க வைத்தனர்' என தமிழக ராணுவ வீரர்கள் சுராங்கனி பாடலை பாடிய வீடியோவை பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி .
இப்பாடல் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த 'அவர் எனக்கே சொந்தம்' என்ற திரைப்படத்தில் இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவன், பூரணி குரலில் வெளியான பாடல் என்பது குறிப்பிடத் தகுந்தது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இந்த அற்புதமான செயலால் நம்மை வியக்க வைத்தனர்... pic.twitter.com/ZzV7dWND34
— Narendra Modi (@narendramodi) October 24, 2022