புதுச்சேரியில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 50- க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர் சிவன் கோவிலில், கடந்த வியாழனன்று பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு புளியோதரை பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பிரசாதங்களை சாப்பிட்டவர்களுக்கு அன்றைய தினமே லேசான வயிற்றுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கடுத்த நாளான வெள்ளிக்கிழமை முதல் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உடல்நிலை பாதிக்கப்பட்ட 50- க்கும் மேற்பட்டோர், புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் தரப்படும் பிரசாதம் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதே முக்கிய காரணம் என பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கோவில் பிரசாதங்களை வாங்கி சாப்பிடும் மக்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.