தந்தையும், மகளும் ஒரே கல்லூரியில் படித்து வரும் ஆச்சரிய சம்பவம் மும்பை பகுதியில் நடந்துள்ளது.
மும்பையை சேர்ந்த சட்ட கல்லூரி மாணவி ஒருவரின் தந்தைக்கு, அவரின் சிறு வயதில் சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ஆனால் அவரது குடும்ப சூழல் காரணமாக அவரால் சட்டம் பயில முடியாமல் போனது. ஆனால் பணியில் சேர்ந்து தனது மகள்கள் மற்றும் மகனை கல்லூரிக்கு அனுப்பிய பிறகும் அவருக்கு சட்டப்படிப்பின் மேல் இருந்த ஆர்வம் குறைந்தபாடில்லை. அவரது இந்த ஆர்வத்தை பார்த்த அவரின் மகள், தனது கல்லூரியிலேயே அவரது தந்தையம் சட்டம் படிக்க ஏற்பாடுகள் செய்துள்ளார். இதனையடுத்து தற்போது கல்லூரியில் சேர்ந்து தனது மகளின் ஜூனியராக சட்டம் படித்து வருகிறார் அந்த தந்தை.
இவர்கள் குறித்த பதிவு இணையத்தில் வைரலாக, இதுகுறித்து பதிவிட்டுள்ள மாணவி, "என் தந்தைக்கு சட்டப் படிப்பு மீது எப்போதும் ஆர்வம் இருந்தது. எனினும் அவரின் குடும்பச் சூழலால் அவர் படிப்பை தொடர முடியாமல் வேலை பார்க்க சென்றுவிட்டார். அவரின் கடின உழைப்பால் எங்களை நன்றாக படிக்க வைக்கவேண்டும் என்று நினைத்தார். அதன்படி என்னுடைய அக்கா மருத்துவராக உள்ளார். நானும் எனது அண்ணனும் சட்டப்படிப்பு பயின்று வருகிறோம். நான் சட்டக் கல்லூரியில் சேர்ந்தவுடன் எனது தந்தை தினமும் சட்டக் கல்லூரியின் பாடங்கள் மற்றும் வகுப்புகள் குறித்து விசாரிப்பார். இதனையடுத்து அவருக்கு இன்னும் சட்டப் படிப்பின் மேல் உள்ள ஆர்வம் தீரவில்லை எனத் தெரிந்து கொண்டேன். மேலும் அவருக்கு தற்போது ஓய்வு நேரம் அதிகம் இருப்பதால் அவரைக் கல்லூரியில் சேர்க்க நாங்கள் அனைவரும் திட்டமிட்டோம்.
அதன்படி அவரை என்னுடைய கல்லூரியில் சட்டப்படிப்பு சேர்த்தோம். அவர் என்னுடைய கல்லூரியில் எனக்கு ஜூனியராக தற்போது உள்ளார். நானும் எனது தந்தையும் தற்போது கல்லூரியில் சிறப்பாக பயின்று வருகிறோம். நாங்கள் இருவரும் கல்லூரியில் பாடங்கள் குறித்தும், விரிவுரையாளர்கள் குறித்தும் கலந்து உரையாடுவோம். அதுபோல அவர் என் நண்பர்களுடனும் மகிழ்ச்சியாக உரையாடுவார். நாங்கள் இருவரும் கூடிய விரைவில் பட்டப்படிப்பை முடித்து விட்டு வழக்கறிஞராக பணியாற்ற ஆர்வமாக இருக்கிறோம். நானும் எனது தந்தையும் தற்போது மகிழ்ச்சியாக எங்களின் கனவை நோக்கி பயணித்து வருகிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.