ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவருமான மெஹபூபா முப்தி, தான் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய அரசு ஆப்கானிஸ்தான் மக்களின் உரிமைகள் மீது அக்கறையை வெளிப்படுத்துகிறது. ஆனால் அதே உரிமைகளைக் காஷ்மீர் மக்களுக்குத் தர வேண்டுமென்றே மறுக்கிறது. (காஷ்மீர்) நிர்வாகத்தின் கூற்றுப்படி காஷ்மீரில் நிலைமை சாதாரணமாக இல்லாததால் நான் இன்று வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன். இது நிலைமை சாதாரணமாக உள்ளது என்ற அவர்களின் போலியான கூற்றை வெளிப்படுத்திவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானியின் மரணத்தைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதற்கு மெஹபூபா முப்தி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் சையது அலி ஷா கிலானியின் உடலில் பாகிஸ்தான் கொடியைப் போர்த்தியதற்காக அவர்களது குடும்பத்தினர் மீது உபாவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதையும் மெஹபூபா முப்தி கடுமையாகக் கண்டித்திருந்தார். இந்த சூழலில், தான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக மெஹபூபா முப்தி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.மெஹபூபா முப்தி, தான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறியதற்குச் சற்று முன்னர்தான் காவல்துறையினர், ஜம்மு காஷ்மீரில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாகத் தெரிவித்திருந்ததும் இங்குக் கவனிக்கத்தக்கது.
அதேசமயம் மெஹபூபா முப்தியை வீட்டுக்காவலில் வைக்கவில்லை என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை இன்று குல்கம் பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதாகவும் ஜம்மு காஷ்மீரின் மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். குல்கம் பகுதியில் மெஹபூபா முப்திக்கு ஒரு வீடு உள்ளது. ஒரு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அந்த வீட்டிற்குச் செல்ல இருந்ததாகவும், அப்போது காவல்துறையினர் அவரை தடுத்ததாகவும் கூறப்படுகிறது.