காங்கிரஸ் கட்சியின் தலைவர் விவகாரத்தில் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்த கட்சியின் 23 மூத்த தலைவர்கள், நேற்று காரியக் குழுக் கூட்டம் முடிந்தவுடன் கூட்டாக சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நேற்று (24/08/2020) காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. காங்கிரஸ் காரிய குழுக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல்காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவாரா? என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே எழுந்துள்ள நிலையில், தலைமை விவகாரத்தில் விரைவில் உறுதியான முடிவு எடுக்க வேண்டும் என கபில் சிபல், சசிதரூர், குலாம் நபி ஆசாத், பிருத்விராஜ் சவுகான், ஆனந்த் சர்மா உள்ளிட்ட 23 தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர். மேலும் நேரு குடும்பத்தை அல்லாத ஒருவர் தலைவராக நியமிக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் வலியுறுத்தினர்.
இந்நிலையில், சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்த கட்சியின் 23 மூத்த தலைவர்கள், நேற்று காரிய குழுக் கூட்டம் முடிந்தவுடன் கூட்டாக சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று காரிய குழுக் கூட்டம் முடிந்ததும் குலாம் நபி ஆசாத் வீட்டில் இந்த தலைவர்கள் சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.