பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் பால் சிங் என்பவர் 'வாரிஸ் பஞ்சாப் தே' என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பானது பஞ்சாப் மாநிலத்தில் பஞ்சாபை பிரித்து தனி நாடாக அறிவிக்க கோரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
கடந்த மாதம் பஞ்சாபின் ரூப்கர் மாவட்டம் சாம் கவுர் சாகிப் என்ற பகுதியைச் சேர்த்த பரிந்தர் சிங் என்பவரை கடத்திச் சென்று தாக்கியதாக அம்ரித்பால் சிங் உள்ளிட்ட மூவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கில் சம்பந்தப்பட்ட மூவரில் ஒருவரான லவ் ப்ரீத் சிங்க் என்பவரை போலீசார் கைது செய்து காவல்நிலையத்தில் வைத்திருந்தபோது லவ் ப்ரீத் சிங்கை மீட்பதற்காக அம்ரித்பால் சிங் தலைமையில் தனது ஆதரவாளர்களுடன் அஜினாலா காவல் நிலையத்திற்கு வாள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் வந்து காவலர்களிடம் சண்டை போட்டுள்ளனர்.
இது தொடர்பாக கடந்த சில வாரமாக அம்ரித் பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர் பஞ்சாபிலிருந்து தப்பித்துச் சென்ற அம்ரித்பால் சிங் நேபாளத்திற்கு சென்றதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து தலைமுறைவாக இருந்த அவரை மார்ச் 18 ஆம் தேதி முதல் போலீசார் தேடிவந்த நிலையில் தற்போது அவர் சரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது பஞ்சாப் மாநிலம் மோகாவில் சரணடைந்த அம்ரித் பால் சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.