கேரளாவில் இருவருக்கு உறுதி செய்யப்படாத வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து இறந்தவர்களின் மாதிரிகள் புனேவில் உள்ள வைரஸ் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் உயிரிழந்த இருவருக்கும் நிஃபா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இரண்டு பேர் நிஃபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருந்தார்.
நிஃபா வைரஸ் பரவல் காரணங்களால் கேரளாவில் பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் எனக் கேரள மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கேரளாவில் குறிப்பாக கோழிக்கோடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த கேரளா சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் மாநில எல்லைகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிஃபா வைரஸ் தொற்றைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் குறித்து ஐ.சி.எம்.ஆர் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. கரோனா பரவலைத் தடுப்பதற்கான வழிகாட்டுதலை போலவே கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் எனவும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிஃபா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குத் தொற்றுவதால் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானது என ஐ.சி.எம்.ஆர் தலைவர் ராஜீவ் தெரிவித்துள்ளார். நிஃபா வைரஸால் பாதிக்கப்படுபவரின் வியர்வை, உமிழ்நீர், ரத்தம் போன்றவற்றை தொடக்கூடாது. நிஃபா வைரசால் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்தி சிகிச்சை தர வேண்டும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஐ.சி.எம்.ஆர் வழங்கியுள்ளது. அதே நேரம் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், 'வவ்வாலில் இருந்து தான் நிஃபா வைரஸ் பரவுகிறது. எனவே அவற்றுக்குத் தொல்லை தந்து பறக்க வைக்க வேண்டாம்' எனத் தெரிவித்துள்ளார்.