மஹாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்க தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில், 22ஆம் தேதி இரவோடு இரவாக பேச்சு முடிந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது.
இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்று அதிர்ச்சியூட்டினார். இதனால் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் மனு தாக்கல் செய்தன. இதில் இன்று பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.
அதன்படி மஹாராஷ்டிராவில் நாளை (27-11-19) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 162 ஆதரவு எம்.எல்.ஏ க்களுடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா நேற்று பேரணி நடத்திய நிலையில், நாளையே பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது அக்கட்சிக்கு புதிய சிக்கலையை உருவாக்கியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலை செய்யவும், ரகசிய வாக்கெடுப்புக்கு அனுமதி இல்லை எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.