மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனப் பிரதமர் அறிவித்துள்ளார்.
கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், கேரளாவின் மூணாறு. பெட்டிமுடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பில் நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கிய 80 பேரைக் காணவில்லை எனத் தகவல் வெளியான நிலையில், நிலச்சரிவில் சிக்கியிருந்த 4 பேர் உடல்கள் சடலமாக இன்று காலையில் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உயிருடன் மீட்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்டோர் மூணாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் 20 தோட்ட தொழிலாளர்களின் வீடுகள் முழுமையாகச் சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனப் பிரதமர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "இடுக்கி மாவட்டம் ராஜமலை பகுதியில் நிலச்சரிவில் ஏற்பட்ட உயிரிழப்பை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்துவிதமான உதவிகளையும் செய்து வருகிறார்கள். இடுக்கி நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பத்தினருக்குப் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.