Skip to main content

காதலுக்கு தடைவிதித்த கிராமம்!

Published on 03/05/2018 | Edited on 03/05/2018

காதல் திருமணம் செய்துகொள்பவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாகக் கூறி, காதலுக்கே தடைவிதித்து கிராமம் ஒன்று பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

 

Khap

 

பஞ்சாப் மாநிலம் தோரஹாவில் உள்ளது சன்கோயன் குர்து கிராமம். இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டது. இதையடுத்து, அவசர அவசரமாக கூட்டப்பட்ட பஞ்சாயத்தில், ஒரு திடீர் முடிவு எடுக்கப்பட்டது.

 

அதில், ‘இந்த கிராமத்தைச் சேர்ந்த ஆணோ, பெண்ணோ அவரவர் சொந்த விருப்பத்தின் பேரில் காதல் திருமணம் செய்துகொண்டால், அவர்களை கிராமத்தை விட்டு ஒதுக்கிவைப்போம். அவர்களோடு யாரேனும் பழகினால் அவர்களையும் கிராமத்தை விட்டு ஒதுக்கிவைப்போம்’ என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, எந்தக் கடைகளும் அவர்களுக்கு பொருட்கள் தரமாட்டார்கள். கிராமத்தின் பொது நிகழ்வுகளில் அவர்கள் கலந்துகொள்ள முடியாது. பஞ்சாயத்து தரும் எந்த நலத்திட்ட உதவிகளும் அவர்களுக்குக் கிடைக்காது. இதனை அப்படியே பிரசுரமாக அச்சிட்டு கிராமம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் ஒட்டியுள்ளனர்.

 

‘வயது வந்தவர்கள் தங்களுக்கு விருப்பமான ஒருவரை தாராளமாக திருமணம் செய்துகொள்ளலாம். இதற்கு தனிநபரோ, பஞ்சாயத்தோ தடைவிதிக்க முடியாது. ஒருவேளை அப்படி தடை ஏதும் விதிக்கப்பட்டால், அது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. சம்மந்தப்பட்ட ஜோடி இதுகுறித்து முறையிட்டு, தங்களுக்கான பாதுகாப்பை அரசு தரப்பிலிருந்து உறுதிபடுத்திக் கொள்ளலாம்’ என்கிறது அரசியலமைப்புச் சட்டம். ஆக, இதுபோன்ற உத்தரவு சட்டரீதியில் செல்லுபடியாகாது என்பது உறுதியாகிறது.

 

அதேசமயம், ‘இந்த கிராமத்தில் இதுபோல் இதற்கு முன் நடந்த 6 காதல் திருமணங்களுக்கும் இதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்மூலம், சம்மந்தப்பட்ட குடும்பங்களில் இருந்து கட்டப்பஞ்சாயத்து என்ற பெயரில் பணம் பிடுங்குவதற்காக இப்படியெல்லாம் பேசுவார்கள். இதையெல்லாமா பெரிதுபடுத்துவது?’ என்கிறார்கள் விவரம் தெரிந்த கிராம மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்