மகாராஷ்டிரா மாநிலம், மும்பை செம்பூரில் என்.ஜி. ஆச்சார்யா மற்றும் டி.கோ. மராத்தா எனும் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு அனைத்து மாணவர்களும் வழக்கம் போல் வந்தபோது, திடீரென ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படாமல் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இது தொடர்பாக, இஸ்லாமிய மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களுக்குத் தெரிவித்து, கல்லூரிக்கு வரவழைத்தனர். இதையடுத்து, இஸ்லாமிய மாணவிகளும், அவர்களுடைய பெற்றோர்களும் கல்லூரி வாசல் முன் நின்று போராட்டம் நடத்தினர். இதனால், அந்த கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர், கல்லூரி முதல்வரிடம் இது தொடர்பாக விசாரித்தனர். அதில் அவர், “இந்த கல்லூரியில் மாணவ, மாணவிகள் மத அடையாளங்களைப் பிரதிபலிக்கும் வகையில் ஆடைகள் அணிவதற்கு ஆடை கட்டுப்பாடு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
கல்லூரி எடுத்த இந்த நடவடிக்கையை எதிர்த்து, 9 இஸ்லாமிய மாணவிகள் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களுடைய மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், ‘மாணவ - மாணவிகள் மத்தியில் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மத ஆடைகளுக்குக் கல்லூரி தடை விதித்திருக்கிறது. இதனை, மாணவிகளின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக கருத முடியாது’ என்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.
இதனை தொடர்ந்து, மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அந்த மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே பி பர்திவாலா, மனோஜ் மிஷ்ரா அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘பொட்டு, திலகம் வைக்க வேண்டாம் என உங்களால் கூற முடியுமா? அதற்கு தடை விதிக்க முடியுமா?’ எனக் கல்லூரியிடம் கேள்வி எழுப்பினர். மேலும் அவர்கள், ‘பெயரிலேயே மதத்தை கண்டுபிடித்து விடலாமே? அதற்கு மாற்றாக எண்களை வைத்து அழைப்பீர்களா? மத பேதமின்றி அனைத்து மாணவர்களும் இணைந்து கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்து ஹிஜாப் அணியத் தடை விதித்த மும்பை கல்லூரியின் உத்தரவை இடைக்காலமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டனர்.