
பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை பிரச்சனைகள் குறித்து கல்வி மூலம் விழிப்புணர்வு கொடுக்கப்படுகிறதா? என்பது குறித்து வழக்கறிஞர் ஆபாத் ஹர்ஷத் போண்டா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பிற குற்றங்கள் தொடர்பான நாட்டில் உள்ள தண்டனைச் சட்டங்கள் குறித்து விளம்பரங்கள், கருத்தரங்குகள், துண்டுப்பிரசுரங்கள் மற்றும் பிற முறைகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு உள்ளூர் மட்ட அதிகாரிகள் மற்றும் மாநில அரசு அதிகாரிகளைக் கேட்குமாறு மையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிவி நாகரத்னா மற்றும் சதீஷ் சந்திரா ஷர்மா ஆகியோர் அமர்வு முன்பு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது, “பெண்களை தனியாக விட்டுவிடுங்கள். பெண்களை தனியாக விட்டுவிடுவது என்பது தான் நாங்கள் விடுக்கும் ஒரே வேண்டுகோள். பெண்களைச் சுற்றி ஹெலிகாப்டர் இருக்க வேண்டிய அவசியமில்லை, அவர்களை கண்காணிக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ தேவையில்லை. அவர்களை வளர விடுங்கள், அதை தான் இந்த நாட்டில் உள்ள பெண்கள் விரும்புவார்கள்.
பெண்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கச் செல்லும் போது அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் நிஜ வாழ்க்கையில் நடக்கிறது. கிராமப்புறங்களில் கழிவறை வசதிகல் இல்லாததால், அவர்கல் மாலை வரை காத்திருந்து மலம் கழிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் மூலம் கிராமங்களில் சில வளர்ச்சிகள் ஏற்பட்டாலும், இன்னும் அங்கு குளியலறை மற்றும் கழிவறை வசதிகள் இல்லை. தங்களைத் தாங்களே ஆசுவாசப்படுத்திக் கொள்ள பெண்கள் மாலை வரை காத்திருக்க வேண்டும். இளம் பெண்களும் பகலில் திறந்த வெளியில் செல்ல முடியாததால், மாலை வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இது போன்ற வழக்குகள் நிறைய பார்த்துள்ளோம்.
இதில், அவர்கள் இரண்டு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். ஒன்று, பெண்கள் நாள் முழுவதும் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்வதால் அவர்களுக்கு உடல்நிலை சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இரண்டாவது, அவர்கள் மாலையில் வெளியில் செல்லும்போதோ அல்லது திரும்பும்போதோ பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார்கள். நகரங்களிலோ அல்லது கிராமப்புறங்களிலோ பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை ஆண்கள் ஒருபோதும் புரிந்துகொள்ளப்போவதில்லை. பெண்கள் தனது பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ச்சியாக தெரு, பேருந்து, ரயில் நிலையம் என ஒவ்வொரு இடத்திலும் காலடி வைக்கும் தருணத்தில் அவர்களுக்கு சுமை இருக்கிறது.
அந்த சுமையோடு வீடு, வேலை, சமூகம் என கூடுதல் பொறுப்புகளோடு அவர்கள் சுமப்பது கூடுதல் மனச் சுமையை ஏற்படுத்தும். பாலியல் வன்கொடுமை மிரட்டல்களைப் பெறுவதற்கு பெண்கள் இருக்கிறார்கள் என்று அவர்கள் நினைக்கக்கூடாது. இந்த மனநிலை மாற வேண்டும். நகரங்களிலும் கிராமப்புறங்களிலும், அச்சுறுத்தல் எல்லா இடங்களிலும் உள்ளது” எனத் தெரிவித்து கல்வி மற்றும் பாலின விழிப்புணர்வு தொடர்பான விரிவான பாடத்திட்டங்கள் குறித்து விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் விசாரணையை மே 6ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.