ஜம்மு - காஷ்மீரில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில் ரயில் ஓட்டுநர்களின் பணி மாற்றத்திற்காக சரக்கு ரயில் ஒன்று நிறுத்தப்பட்டது. அப்போது ரயிலை எஞ்சினை இயக்கத்தில் வைத்துவிட்டு ஓட்டுநர்கள் ரயிலை விட்டு இறங்கியுள்ளனர். இதனையடுத்து அந்த ரயில் திடீரென ஓட்டுநர் இல்லாமல் புறப்பட்டுள்ளது. அதிவேகமாக சென்ற ரயில் 5 ரயில் நிலையங்களைக் கடந்து சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நோக்கி வேகமாக சென்றுள்ளது.
ஓட்டுநர் இல்லாமல் மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லும் சரக்கு ரயில் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சரக்கு ரயில் எஞ்சினில் கை பிரேக்கை இழுக்க மறந்து ஓட்டுநர்கள் இறங்கிச் சென்றதாலும், தண்டவாளம் சரிவு காரணமாக ரயில் தானாகப் புறப்பட்டது தெரியவந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று கோஷியார்பூரில் உள்ள உச்சி பாஸ்சி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் மரக்கட்டைகளை வைத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். அதே சமயம் லந்தர் - பதான்கோட் இடையே உள்ள ரயில் வழித்தடத்தில் உள்ள அனைத்து கிராசிங்குகளும் உடனடியாக மூடப்பட்டன. இதன் காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என ஜம்மு கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தனர்.