பெங்களூர் பொறியாளர் அதுல் சுபாஷ் என்பவர், பிரிந்து சென்ற தனது மனைவியும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து தொல்லை கொடுப்பதாகவும், பணம் கேட்டு மிரட்டுவதாகவும் 24 பக்கத்திற்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், போபால் தொழிலதிபர் ஒருவர் மீது அவரது இரண்டாவது மனைவி புனே குடும்ப நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் வழங்க கோரி வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். அந்த புகாரில், ‘தனது கணவருக்கு அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பல தொழில்கள் மற்றும் சொத்துக்கள் இருக்கிறது. ரூ.5,000 கோடி அளவு சொத்து மதிப்பு கொண்டுள்ள தனது கணவர், அவரது முதல் மனைவி பிரிந்த போது ரூ.500 கோடியை ஜீவனாம்சமாக கொடுத்தார். அதன் அடிப்படையில் தனக்கும், ஜீவனாம்சம் வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான வழக்கு புனே குடும்ப நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது பரஸ்பர விவாகரத்து ஆணையின் மூலம் இறுதித் தீர்வுக்காக ரூ.8 கோடி வழங்க கணவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, மனுதாரருக்கு நிரந்தர ஜீவனாம்சமாக ரூ.10 கோடி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை ஏற்றுக்கொள்ளாத மனைவி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று (19-12-24) உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிவி நாகரத்னா மற்றும் பங்கக் மித்தல் அமர்வு முன்பு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது, “இந்து திருமணமானது ஒரு குடும்பத்திற்கான அடித்தளமாக கருதப்பட வேண்டுமே தவிர, வணிக முயற்சிக்காக இருக்கக் கூடாது. திருமணம் தொடர்பாக சட்டத்தில் உள்ள கடுமையான விதிகள் பெண்களின் நலனுக்கானது. பெண்கள் தங்கள் கைகளில் உள்ள இந்த கடுமையான சட்ட விதிகள் அவர்களின் நலனுக்கான நன்மை பயக்கும் சட்டங்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். தங்கள் கணவர்களை தண்டிக்கவோ, அச்சுறுத்தவோ, ஆதிக்கம் செலுத்தவோ அல்லது மிரட்டி பணம் பறிக்கவோ பயன்படுத்தக் கூடாது. குற்றவியல் சட்டத்தில் உள்ள விதிகள், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பதற்காக உள்ளன. ஆனால் சில நேரங்களில் சில பெண்கள் அவர்களது தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்துகிறார்கள். சில வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவரின் வயதான மற்றும் படுக்கையில் இருக்கும் பெற்றோர்கள், தாத்தா பாட்டி உள்பட கணவரின் உறவினர்களைக் கூட போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்கிறார்கள்.
பராமரிப்பு அல்லது ஜீவனாம்சத்திற்கான விண்ணப்பத்தில், சொத்துக்கள், அந்தஸ்து மற்றும் வருமானத்தை முன்னிலைப்படுத்தி, அவர்களின் சொத்துக்களுக்கு இணையான தொகையைக் கேட்பது பெரும்பாலும் காணப்படுகிறது. இந்த போக்கு சரியானது அல்ல. ஜீவனாம்சம் நிர்ணயம் செய்வது பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. . எனவே, . குற்றம் சாட்டப்பட்டவர், மனுதாரருக்கு ரூ.10 கோடியை ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டும் என்ற புனே குடும்ப நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்” என்று கூறி கணவர் மீது மனுதாரர் தொடர்ந்த அனைத்து குற்ற வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.