கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது, கோத்ரா ரயில்வே ஸ்டேஷனில், சபர்மதி விரைவு ரயிலில் சில பெட்டிகள், வன்முறையாளர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் 59 பேர் உயிரிழந்தனர். இதை கண்டித்து அந்த மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. அப்போது அந்த கவலரத்தை கட்டுப்படுத்த முதல்வராக இருந்த நரேந்திர மோடி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் மோடிக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று என்று 2012ஆம் ஆண்டு கலவர வழக்கிலிருந்து விடுவித்தது. இந்த கலவரத்தில் முன்னாள் எம்.பி. இசான் ஜாப்ரி என்பவரும் கொல்லப்பட்டார். அவருடைய மனைவி ஜாகியா ஜாப்ரி, இந்த சிறப்பு புலனாய்வு குழுவின் முடிவை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அவருடைய மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு நிராகரித்தது. இதை எதிர்த்து ஜாகியா ஜாப்ரி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு வரும் 19-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், தீபக் குப்தா ஆகியோர் தலைமையில் விசாரணைக்கு வர உள்ளது.